யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ்.பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக மாணவர்கள் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல்நகர் வளாகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள்.

அவசரக் கால நிலைமை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி அதிகரிப்பு, பொருட்கள் தட்டுப்பாடு, எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, போன்றவற்றால் இலங்கையில் மக்கள் பாரிய இன்னல்களைச் சந்தித்து வருகின்றமையை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை என அரசாங்கத்தைக் கண்டித்து இன்று இவ் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

பொறியியல் பீடம், தொழினுட்பபீடம், விவசாய பீட மாணவர்கள் ஒன்றிணைந்து இப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் “74 ஆண்டுகால பேரழிவு முடிவு கட்டுவோம்”, “பேராதனை பல்கலைக்கழகத்தைச் சுற்றிவளைத்துள்ள பொலிஸ், படைகளை அகற்று”, “அடுத்த தலைமுறைக்காக நாட்டை பாதுகாப்போம்”, “கோட்டா வீட்டுக்குப் போகங்கள்”, “மனித உரிமைகள் மீறல்களை நிறுத்து” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் இப் போராட்டத்தின் போது ஏந்தியிருந்தனர்.